Wednesday, 14 June 2017

உன்னை காணாத வரம் வேண்டும்..!(3)


 

 விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.தரை இறங்குவதற்கு முன்னாலேயே,நான் சிங்கபூருக்கு செல்லும் முன்,பயன்படுத்திய "சிம்"மை ,என் கைப்பேசியில் மாட்டி இருந்தேன்.சென்னையில் இறங்கியதும்,குறுஞ்செய்தி வந்தது.பணம் செலுத்த சொல்லி.விமானத்தை விட்டு இறங்கி,குடிநுழைவு சடங்குகளை முடித்து விட்டு ,எனது சாமான்களை எடுத்துக் கொண்டு ,வெளியானதும்,"சிம்"வேலை செய்ய பணம் ஏற்றினேன்.அடுத்த நொடி வாட்ஸ் அப்பில்,முனீராவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.சென்னை வந்து விட்டதாக.உடனே பதில் வந்தது,என் செய்திக்காக காத்திருந்திருப்பாள் போல.மதுரைக்கு போயி ,மெசேஜ் போடுவதாக பதில் அனுப்பி விட்டு ,சில வார இதழ்கள் வாங்கலாம் என கடைகளில் பார்த்தேன்.நாட்டில் எத்தனை பிரச்சனைகள் நடந்தாலும் ,இங்கே அனேக பத்திரிக்கைகளுக்கு ,பெரிய பிரச்சனை என்னவென்றால் ,"அந்த சொப்பண சுந்தரியை யாரு வச்சிருக்கா.."என்றுதான். அட்டையில் நடிகைகள் நடிப்பை ,மன்னிக்கவும் இடுப்பைக் காட்டிக் கொண்டிருந்தார்கள் .ஆதலால் இதழ்களை வாங்க விருப்பம் இல்லாமல்.,கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ,மின்மினிகளால் ஒரு கடிதம்"எனும் கவிதைப் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன்.

    அப்புத்தகத்தை வாங்கிட காரணம், பின் பக்க அட்டையில் இருந்த வரிகள் தான்.

"நான் உன் மூச்சுக் காற்று
என்னை நீ விட்டாலும்
மீண்டும்
வாங்கித்தான் ஆக வேண்டும்."என இருந்த வரிகள்,எதுவுமே பேசாமல்,எதை எதையோ சொல்லிற்று அக்கவிதை.

    பிறகு வேக வேகமாக ,உள் நாட்டு முனையத்திற்கு சென்று,மதுரைக்கு செல்ல காத்திருந்தேன் .விமானம் ஒரு மணி நேரம் தாமாதமாகத் தான் வந்தது.நல்லவேளையாக கைவசம்,கவிதையாய் அவள் நினைவும்,அவளைப்போலவே அழகாய்,கவிக்கோவின் கவிதையும்
இருந்தது.அதில் சில ...

"உன்னை தரிசிக்கும்போது
கவிதை எழுதுகிறேன்
கவிதை எழுதும்போது
உன்னை தரிசிக்கிறேன்."

"நான் முள்ளாக
இருந்தாலென்ன!?
ரோஜாவே!
உன்னிடம் இருக்கிறேனே
அது போதாதா.!?"

       இத்தகையான வரிகளில்,தண்ணீரில் விழுந்த கற்கண்டாய் கரைந்து தான் போனேன் .வாசிப்பினூடே விமானத்தில் ஏறி அமர்ந்தேன்.அரை மணி நேர பயணத்திற்கு பிறகு மதுரை சென்றடைந்தேன்.வெளியில் நண்பன் அன்சாரி வந்து ,காத்திருந்தான் வாடகை வாகனத்துடன்.சாமான்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு ,கிளம்பினோம்.பிறந்த மண்ணைத் தேடி...

     வாகனப் பயணத்தில்,அன்சாரி வாங்கி வர சொன்ன,சிகரெட் கட்டுகளை அவனிடம் கொடுத்தேன்.அதை அவ்வளவு சந்தோசத்தோடு வாங்கி,பிரித்து ஒன்றை வாயில் வைத்து பற்ற வைத்து,புகையை ஆழமாக உள்ளிழுத்து,வெளியில் விட்டான்.உள்ளே சென்ற புகையில் முக்கால் பகுதிக்கும் மேலாக,உள்ளிருந்துக் கொண்டு,மிச்ச சொச்ச புகையே வெளியில் வந்தது.அந்த  பரமானந்தத்தை அடைந்த பின்பே பேச ஆரம்பித்தான்.

"எப்படிடா..அங்கே பொழப்பெல்லாம்..."என ஆரம்பித்து,எல்லா விசயங்களையும் கேட்டான்.நான் பதில் சொல்லிக் கொண்டே வந்தேன்.அதற்கிடையிலேயே முனீராவிற்கு ,வாட்ஸ் அப்பில் ,போன் பண்ணச் சொல்லி செய்தி அனுப்பினேன். அவளும் அழைத்து விட்டாள்.பயணத்தைப் பற்றி ,இன்னும் எவ்வளவு நேரத்திற்கு ஊருக்கு போவாய்..!?எனக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

     தார்ச்சாலை ,கானல்நீர்,கோடை வெயில்,கருவேல மரங்கள்,பொட்டல் காடு,என நான் கடந்து சென்றாலும் ,அது அத்தனையும் என்னிடம் நலம் விசாரிப்பதுப் போல் இருந்தது.நேரம் கழிய,தூரம் குறைய ,என் ஊரும் வந்தது.சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆராய்ச்சி நகர் என்ற பெயர் பலகையுடன் .சாலையிலிருந்து இறங்கி,இரு வீடுகள் தள்ளிச் சென்றதும் என் வீடு வந்தது.வீட்டிற்கு வெளியிலிருந்த வேப்பமரம் ,கொஞ்சம் சதைப் பிடிப்பாக இருந்து,கிளைகளை அகலப் பரப்பி இருந்தது.அம்மர நிழலில் ,இரை தின்றுக் கொண்டிருந்த கோழிகள்,தலைத்தூக்கி "கெக்,கெக்"என மெல்லிய சத்தத்துடன் ,"யார் இவன்"என கேட்பதுப் போல்,என்னைப் பார்த்து விட்டு,இரை வேட்டையை தொடர்ந்தது.வீட்டு வெளித் திண்ணையில்,பட்டியல் கதவில் மாட்டப்பட்டிருந்த திரைச்சீலை புதிதாக மாற்றப் பட்டிருந்தது.கல்யாண வீடென்பதால்.

        "வாடா..வாப்பா.."என முகம் முழுக்க சிரிப்புடன் என் தாய் கமீதா வரவேற்றாள்.கொண்டு வந்த சாமான்களை ஒரு அறையில் வைத்து விட்டு,வெளியில் வருகையில்,அடுப்படியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த தங்கை சரிபா வந்தாள்."என்னண்ணே..நல்லா இருக்கியா..!,?என ,திருமண சந்தோசம் அவள் முகத்தில் தெரிந்தது.நம் வீட்டில் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தவள்.போகும் வீட்டில்,எப்படி இருப்பாளோ என கலக்கமாகத் தான் இருந்தது எனக்கு.அதை மறைத்துக்கொண்டு "ம்ம்...நல்லா இருக்கேன்..."என்றேன் .சொந்தங்களில் சிலர் வந்து விட்டுப் போனார்கள்.ஓரிரு நாட்களே இருந்தது,தங்கையின் கல்யாணத்திற்கு,எல்லா வேலையையும்,என் தாய் ஒருத்தியே பார்த்திருக்கிறாள்.அதனை சொல்லிக் கொண்டிருக்கையில்,சில வருடங்களுக்கு முன்னால்,நோய்வாய்ப்பட்ட நிலையில்,என் தந்நை தவறியதை நினைத்து அழுதாள்.

    மறுநாள் நெருக்கமான உறவுகளை நேரில் சந்தித்து ,தங்கையின் திருமணமானத்திற்காக அழைத்தேன்.பலர் வருவதாக சொன்னார்கள்.சிலர் சில சடவுகளைச் சொல்லி வழக்காடினார்கள்.பணிந்து பேசி விட்டு வந்தேன்.அனைவரும் கலந்துக்கொள்வார்கள் என்று.மற்றபடி என் நண்பர்கள்,எல்லோரையும் சந்தித்து,உறவாடினேன்.கண்மாய்,பேருந்து நிலையம்,மய்யத்து வாடி,மீன் பசார் என ,விட்டு போன சொந்தங்களை,புதுபித்து விட்டு வீடு வந்தேன்.

    மறுநாள் ஏ.எஸ் திருமண மகாலில் கல்யாணம்.இன்று என் வீட்டிற்கு வெளியில் சில பிரகாசமான விளக்குகளை கட்டியிருந்தார்கள்.வீட்டிற்குள் என் தங்கையின் தோழிகள் ,மருதாணி வைத்திட வந்திருந்தார்கள் .அவர்கள் இருப்பதை அறியாமல்,வீட்டிற்குள் நான் சென்றதும்,பூனைக்குப் பயந்து ,தாய்க்கோழியின் றெக்கைக்குள் ஒளிந்துக் கொள்ளும்,கோழிக்குஞ்சுகளைப் போல்,வெட்கப்பட்டுக்கொண்டு தங்கையின் தோழிகள் அருகில் இருந்த அறைக்குள் அடைக்கலம் புகுந்தார்கள்.இதனால் வீட்டின் வெளியிலேயே,இரவு உணவை உண்டு விட்டு ,பக்கத்து வீட்டுக்காக,குவிக்கப்பட்டிருந்த ஆற்று மணலில் ,குற்றாலத்துண்டை விரித்து அதன் மேல்,என் உடலைச் சாய்த்தேன்.மணலின் ஈரம் ,உடலெங்கும் பரவி,ஒருவித கிளர்ச்சியை ஊட்டியது,முனீராவிடம் கைப்பேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன் .

   மறுநாள் காலை நேரத்தோடு,மகாலுக்கு சென்று விட்டோம்.நரிப்பையூரிலிருந்து மாப்பிள்ளை வீட்டார்களும் வந்து விட்டார்கள்.மகாலின் கீழ்ப்புறம் விருந்துண்ணுவதற்காகவும்,மேல்தளம் திருமணம் நடப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது .மேடையில் மாப்பிள்ளை காசிம் அமர்ந்திருந்தார்.அவர் அருகினில் என் பெரிய வாப்பா அஸீஸ் அமர்ந்திருந்தார் .ஆலிம் பசீர் மகர் விபரம் எல்லாம் கேட்டு விட்டு ,பிரார்த்தனைகள் செய்து விட்டு ,"நெய்னா முகம்மதுவின் மகள் சரிபாவை,மகர் பணம் ஆயிரம் கொடுத்து திருமணம் செய்துக் கொள்ள சம்மதமா..!?என ஆலிம் பசீர்,கல்யாண மாப்பிள்ளை காசிமிடம் கேட்டார்.காசிம் சம்மதம் என சொல்லி விட்டு பிறகு,கையெழுத்திட்டார் .பிறகு இரு பெரியவர்களை அனுப்பி,கல்யாணப் பெண்ணிடம்,இன்னார் மகன் இன்னாரை கட்டிக் கொள்ள சம்மதமா..!?என கேட்டு விட்டு ,மணப் பெண்ணின் கையெழுத்து வாங்கி வர சொன்னார் ஆலிம்.மணமகள் அறைக்கு சென்றவர்கள்,சம்மதம் சொன்ன பிறகு கையெழுத்து வாங்கி வந்தார்கள்.இரண்டு,இரண்டு சாட்சி கையெழுத்து வாங்கி விட்டு,மணமக்கள் சிறந்து வாழ்ந்திட,நபிமார்கள்,அவர்களது மனைவிமார்கள் பெயர்களைச் சொல்லி வாழ்த்தினார்கள் .இனிதே நடந்து முடிந்தது,திருமண உடன்படிக்கை.

   மணமகன்,மணமகள் அறைக்கு சென்றார்,அங்கு அவர்களது உறவுகள்,கேலி கிண்டல் செய்துக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.மற்றபடி கல்யாணத்தில் கலந்துக் கொண்டவர்கள்,விருந்துண்டு விட்டு,கலைந்துக் கொண்டிருந்தார்கள் .இரைத்தேடி தன் கூட்டை விட்டு,வெளியேறும் பறவைகளைப் போல,விருந்துண்டு விட்டு ,தன் வீடுகளுக்கு மானுடப்பறவைகள் புறப்பட்டதால்,மகால் காலியானது.கல்யாணமானவர்கள் சாப்பிட்டு விட்டு ,நரிப்பையூர் கிளம்பினார்கள்.என் தங்கை செல்வதைப் பார்த்து ,என் தாய் அடக்கிட முடியாமல் அழுதார்.தங்கையும் அழுதுக் கொண்டே கிளம்பினாள்.

      என் தங்கையில்லாத வீடு,மின் விளக்குகள் இருந்தும்,மின்சாரம் இல்லாத நாட்களைப்போலவே இருந்தது .வீடெங்கும் வெறுமை ,நூலாம்படையாக ஒட்டியிருந்தது.நான் வெளியில் கிளம்பி விடுவதால்,அந்த சிரமத்திலிருந்து விடுபட முடிந்தது .என் தாய்தான் பாவம்,ரொம்ப சிரமப்பட்டார். பிறகு விருந்திற்கு ,தங்கையும் அவள் கணவரும் வந்துப் போய்க் கொண்டிருந்தார்கள்.அது கொஞ்சம் எங்களை ஆசுவாசப்படுத்திற்று.பக்கத்து ஊரில் தானே ,தன் மகள் இருக்கிறாள் என ,தன் மனதை தேற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டார் என் தாயார்.

    திருமணம் முடிந்து ஒரு வார காலத்திற்குப் பிறகு,ஒரு நாள் காலை உணவாக,இடியாப்பமும்,வாலைமீன் குழம்பும் செய்திருந்தார்."கொழுத்த மீனு அதான் ,எண்ணையா மெதக்குது"என்று சொல்லிக் கொண்டே ,என் தட்டிலிருந்த இடியாப்பத்தில் குழம்பை ஊற்றி விட்டு,ஒரு சிறு தட்டில் மீனை வைத்து ,முள்ளில்லாமல் பிச்சி பிச்சி எனக்கு வைத்தார். நான் சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தேன்.

"ஏம்மா ..கல்யாண செலவு எவ்வளவு வந்துச்சி..!?யார் கிட்டயும் கடன் எதுவும் வாங்குனீங்களா..!?"

"இல்லடா வாப்பா..நானே சொல்லனும்னு இருந்தேன்..நல்லவேளையா நீயே கேட்டுட்டா...ஒரு நாலு லட்ச ரூவாதான் வாங்கி இருக்கேன்..கொஞ்சம் நகை வாங்க தேவப்பட்டுச்சி..!"

"யாரு கிட்ட..!?

"சாகுல் மாமா இருக்கார்ல..பெரிய பள்ளி வாசத்தெருவுல..அவருகிட்ட.."

"ஒங்களுக்கா அவரு மாமா..எனக்கு தெரியாதே இவ்வளவு நாளா..!?

"ஹா..ஹா...எனக்கு அவரு அண்ண மொற வேணும்..ஒனக்கு தான் மாமா மொற..என் வாப்பாவ பெத்தவரும்,சாகுல் அண்ண வாப்பாவ பெத்தவரும் பங்காளிமாருக.."

"அதுசரி..ஒங்க வாப்பாவையே எனக்கு தெரியாது..இதுல அவுக பெத்தவுக வரை நான் யோசிக்க முடியாது..ஆமா அவரு கிட்ட சொல்லி வாங்குனீங்களா ..கடனை திருப்பி கொடுக்க,கொஞ்ச நாள் ஆகும்னு..."

"அதெல்லாம் கொடுக்க தேவையில்லடா..அவரு மக இளையதை தான் ,ஒனக்கு பேசி முடிக்கலாம்னு இருக்கேன்..அதானல தான் அவரு பணம் தந்தாரு..இல்லனா..ஒரு ரூவா அவர்கிட்ட வாங்க முடியுமா...!?

எனக்கோ நாக்கின் உட்பகுதி,கடைவாய்ப் பற்களினால் கடிப்பட்டதுப் போல்,மண்டைக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.

    "எவனைக் கேட்டு,அவரு கிட்ட பணத்தை வாங்கினா...!?என ஆரம்பித்து,முனீரா கதையெல்லாவற்றையும்,கோபத்தோடு கோபமாக சொல்லி முடித்தேன்.

அதற்கு,"எவளோ ஒருத்திக்காக ,பெத்த தாயோட இப்படி சண்டைக்கி வருவியாக்கும்.."என அழுது குவித்து விட்டார்.நானும் கெஞ்சியும் சொல்லிப் பார்த்தேன்,என் தாயார் கேட்பதாக இல்லை.என்னைத் திட்டி தீர்த்தார்.என் தந்தை மறைவிற்குப் பிறகு எங்களை கஷ்டப்பட்டு வளர்த்ததை சொல்லி அழுதுக் கொட்டினாள்.உடனே வீட்டின் வெளித் திண்ணையில் "இதென்னடா புதுக் கொடுமயா இருக்கு.."என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டேன்.

(தொடரும்...)

Friday, 19 May 2017

உன்னை காணாத வரம் வேண்டும்..!(2)


       அத்தீண்டல் பார்வை சில நேரங்களில் மட்டுமே கிடைத்தது.நாள் செல்ல செல்ல அடிக்கடி கிடைத்தது.பார்வை பார்த்ததும் ,லேசான புன்னைப் பூத்துக் கொண்டோம்.சிற்சில நேரங்களில் வேலியில் ஓணான் ஓடி போயி ஏறிக்கொண்டு ,தலையை மெதுவாக ஆட்டுமே,அதுப்போல ஆட்டிக் கொண்டோம்.ஆனால் அப்பெண்ணிடம் பேசிட தயக்கம் என்றும் சொல்லலாம் அதைவிட பயம் என்றும் சொல்லலாம்.நாங்கள் இருவரும் பார்த்துக் கொள்வதையும்,தலையாட்டிக் கொள்வதையும்,சாரா கவனித்து இருந்திருக்கிறான்.அதனை நான் அறியவில்லை .

    ஒரு நாள் சாப்பிட்டு விட்டு,வெள்ளி கட்ட போனவளிடம், சிரித்து பேசி விட்டு,அவள் போனதும் என்னிடம் வந்தான்.

"என்ன அர்ஷத்...!?ஒரு மாதிரியா மலாய்க்கார புள்ளய பாக்குறே..!என்று அவன் திடீரென கேட்டது,எனக்கு கொதி தண்ணீர் நெஞ்சின் வழி இறங்கியதுப் போல் இருந்தது.நான் சமாளித்தவனாக..

"இல்ல..நீ பாத்தியாக்கும்..!?என்றேன்.

"டேய் பொத்து ...இப்ப கொஞ்ச நேரத்துல பாரு..ஒனக்கு மெசேஜ் வரும் பாரு..என்றான்.அதுபோல குறுஞ்செய்தியும்.,"ஹாய்.."என்று வந்தது.புதிய எண்ணிலிருந்து .

"சாரா..கௌண்டர்ல,அவக்கிட்ட என்ன சொன்னா.."என்று நான் கேட்டேன்.

"ம்ம்..ஆமாலா..நீ பாத்துக்கிட்டே இருந்தே..அதுவும் ஒன்ன பாத்துச்சா..நா அத பத்த வச்சேன்..காசு கட்ட வரயில..அவ கிட்ட சொன்னேன்..நீ அவ கிட்ட பேச விரும்புறதா சொல்லி,ஒன்னோட போன் நம்பர அவ கிட்ட கொடுத்தேன்"என சத்தமாக சிரித்து விட்டு,"நம்ம "கைங்க" எப்பவுமே இப்படிதான்லா..."என இரண்டு கைகளையும் முழங்கையோடு மடக்கி கொண்டு,கை விரல்களை தன் நெஞ்சுப் பக்கம் வளைத்து காட்டினான் .ஏதோ ஆங்கில பாடல் இசைப் பிரியர்கள் கையை அசைப்பதைப் போல்.

    எனக்கோ உள்ளூர பயம்,நமக்கு இது தேவையா..!?வந்தமா பொழச்சமா..!?ஊர் பக்கம் போனாமா னு இல்லாமா...!தேவயில்லாத வேல பாக்க வேணாமே"என்று புத்தி சொன்னாலும்,பழாய்ப் போன மனசு கேட்கவில்லை.ஆசை யாரைதான் விட்டது.!?.பதிலுக்கு "ஹலோ.."என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.

    இப்படியாக தொடர்ந்த குறுஞ்செய்தி ,கைப்பேசியில் அழைத்து பேசும் அளவிற்கு வளர்ந்து விட்டது.இதில் அவளது பெயர் முனீரா என்று தொடங்கி,இருக்கும் இடம்,அவளது அம்மா சிறு வயதில் இறந்து விட்டதாகவும் ,அவளது தந்தை மறுமணம் செய்துக் கொண்டதையும்,அம்மாற்றாந்தாய் அவளை நல்ல முறையில் பார்த்துக் கொள்வதாகவும்  சொன்னாள்.என்னைப் பற்றிய விபரங்களையும் கேட்டாள்.நானும் பகிர்ந்துக் கொண்டேன்.

       எனக்கென்று உற்றார் உறவினர் யாருமில்லாத சிங்கபூரில் ,அவளது அக்கறையான விசாரிப்புகள்,குறுஞ்செய்தி அனுப்பிட தாமாதமானால்,கைப்பேசிக்கு அவள் அழைத்து காரணம் கேட்பதும்,என் மனதிற்குள் அவள் மிக உயர்ந்த இடத்தில் அமர்ந்துக் கொண்டாள்.நடுக்கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு ,கையில் சிக்கும் ஒரு பலகை எப்படி பேருதவியாக இருக்குமோ,அப்படித்தான் அவளது அன்பான வார்த்தைகளும் ,அக்கறையான விசாரிப்புகளும் இருந்து.இப்படியாக சில மாதங்கள் கடந்து விட்டது.

    ஒரு நாள் மாலை நேரம்,"தியோங் பாரு"பார்க்கில்,அவளை சந்திப்பதற்காக சென்றிருந்தேன்.அவ்விடத்தில் சிறு சிறு கூட்டமாகவும்,தனி ஆட்களாகவும்,அவர்களால் முடிந்த உடற்பயிற்சிகள் செய்துக் கொண்டிருந்தார்கள் மக்கள்.நானும் முனீராவும்,கூம்பு போன்ற வடிவில் கட்டப்பட்டிருந்த நிழற்குடையின் கீழ் அமர்ந்திருந்தோம்.எனக்கு எதிரில் அமர்ந்துக் கொண்டு,இந்தியாவில் காஷ்மீர் அழகைப் பற்றி,தாஜ்மகாலைப் பற்றி,ஹிந்தி நடிகைகளைப் பற்றி ,திரைபடங்களில் பார்த்திருப்பாள் போல.அவளுக்கு தெரிந்தவற்றை எல்லாம் என்னிடம் சொல்லிக் கொண்டே போனாள் .நானும் ம் ம் என தலையாட்டிக் கொண்டிருந்தேன்.அப்பொழுதுதான் அவளிடம் நான் கேட்டேன்.

"இப்படி இந்தியாவ பத்தி கேட்குறீயே..இந்தியாவுல உள்ளவன கல்யாணம் பண்ணிக்கலாம்ல நீ.."என்று

"ஹா...ஹா...எனக்கு யாரைத் தெரியும் அங்கே..நீ வேணும்னா என்னய கல்யாணம் பண்ணிக்க.."என்றாள்.

நான் வேண்டுமென்றே தான் அக்கேள்வியை கேட்டேன்.அவளது மனதில் உள்ளதை தெரிந்துக் கொள்ள ,நான் எதிர்பார்த்த பதிலே அவளிடமிருந்து வந்தது.கொஞ்சம் நேரம் கழித்து அவள் கிளம்புவதாக சொல்லி சென்று விட்டாள்.நானோ கிளம்பிட மனமில்லாமல்,மரம்,நிழல்,வெயில்,மாலை,என பார்த்துக் கொண்டே அவ்விடத்தை சுற்றிக் கொண்டிருந்தேன்.ஏதேதோ நினைவுகளுடனும்,கனவுகளுடனும்..

        வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமும் ,மூன்று மாதங்களும் ஆன நிலையில் ,ஊரில் தங்கைக்கு கல்யாணம் வைப்பதாக இருந்ததால்,அக்கல்யாணத்தை காரணம் காட்டி,ஒரு மாத விடுமுறையில் ,ஊருக்கு செல்ல திட்டமிட்டேன்.விடுமுறை தர ,முதலாளி நூர்தீனுக்கு விருப்பம் இல்லை.தொடர்ந்து வற்புறுத்தியதால் விடுமுறை தந்தார் மனதிற்குள் கோபத்தை வைத்துக் கொண்டு,முகத்தில் அதனைக் காட்டிக் கொள்ளாமல்.

    தேக்காவிற்கு சென்று தேவையானவற்றை வாங்கிக் கொண்டேன்.ஊருக்கு செல்வதை ,சில நாட்கள் முன்னதாகவே முனீராவிடம்,நேரில் சந்தித்து சொன்னேன்.சிறு புன்னகையை ,உதடுகள் உதிர்த்தாலும்,அவள் கண்களில் கலக்கம் மின்னலாய் வெட்டியது.ஆனாலும் வார்த்தைகளில் ,சோகத்தை காட்டவில்லை."சரி...போயிட்டு வா.."என்றாள்.எப்பொழுது பயணம் எப்போது திரும்பி வருவாய் ,ஊர் கைப்பேசி எண்கள் கிடைத்ததும்,வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்,என்றெல்லாம் ஆவலாய் சொன்னாள்.

    எனது பயண நாளும் வந்தது,அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உட்கார்ந்திருக்கையில்,முனீராவிற்கு குறுஞ்செய்தி போடுவோமா,தூங்கிக்கொண்டிருப்பாளே,விமானம் ஏறும் போது எட்டு மணிக்கு மேலாகி விடும்,அந்நேரத்திற்கு முன்னால்,கைப்பேசியில் அழைத்து பேசிக் கொள்வோம்,என நினைத்துக் கொண்டிருக்கையில் ,என் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்ததை கத்திச் சொன்னது.எடுத்துப் பார்த்தால் அவளிடம் இருந்து குறுஞ்செய்தி ..

"என்ன ஏர்போர்ட் கிளம்பியாச்சா..."என்று.

"இன்னும் கொஞ்ச நேரத்தில கெளம்பிருவேன்"என பதில் செய்தி அனுப்பி விட்டு,குளித்து விட்டு ,வாங்கி கட்டிய சாமான்களை தூக்கிக் கொண்டு ,வாடகை வாகனத்திற்காக காத்திருந்தேன்.என்னுடன் சாரா நின்று கொண்டிருந்தான்.வாகனம் வந்தது ,சாமான்களை வண்டிக்குள் ஏற்றி விட்டு,"

"டேய்..ஊருக்கு போனதும் போன் பண்ணு சரியா ...!?போனாமா வந்தமா னு இரு.....!?என அக்கறையாக சொல்லி விட்டு ,நான் ஏறியதும் வாகனக் கதவை சாத்தி விட்டு கையசைத்து விட்டு சென்றான்.

   அதிகாலை நேரம் என்பதால்,சாலை காலியாக இருந்தது.மிக இலகுவாக,மித வேகமாக வாகனம் சென்றது.சாலையோர மரங்களும்,சாலை விளக்குகளும்,சுரங்க வழி சாலைகளும்,அவ்வதிகாலை வேளையில் ஒளிக் கவிதையாய் காட்சி தந்தது.

   சாங்கி விமான நிலையம், முனையம் இரண்டில் வாடகை வாகனம் நிற்க,பணத்தை செலுத்தி விட்டு ,சாமான்களை தள்ளு வண்டியில் ஏற்றிக் கொண்டு ,விமான நிலையத்திற்குள் நுழைந்தேன்.அங்கே இளம் நீல நிற "பாஜு குரோங்"ஆடையணிந்து,அதே நிற "தூடோங்"கட்டி,கொஞ்மாக மை தீட்டி,அதிமாக நேசம் காட்டி நின்றுக் கொண்டிருந்தாள் முனீரா.


    அவளைக் கண்ட அந்த கண நேரம் ,ஆச்சர்யமும்,மகிழ்ச்சியும் குழைந்து,மனதைக் கொஞ்சம் பரவசப் படுத்தியது.கண்கள் பெரிதாக்கிக் கொண்டு,

"எப்ப நீ இங்கே வந்தா..!?என்றேன்.

"ஒனக்கு மெசேஜ் போட்டு,நீ ரிப்ளை பண்ணியவுடன் கிளம்பி வந்தேன்..."

"வாரதா ஏன் சொல்லல.."

"இங்கே வந்து பாத்துக்கோ"னு தான் "என்று சொல்லி,தன் தொள்பட்டையை தூக்கி,சிரித்து விட்டு இறக்கினாள்.

"ம்..ம்..அங்கே உட்காரு..நான் போர்டிங் போட்டு விட்டு வாரேன்.."என்று சொல்லி சென்று விட்டு,திரும்பி வந்து ,அவளிருந்த இருக்கையின் அருகில் உட்கார்ந்துக் கொண்டேன்.அவள் பேச ஆரம்பித்தாள்.

"எவ்வளவு நேரமாகும்..நீ ஒங்க கம்போங்க்கு போக...!?

"சாயங்காலம் நாலு,அஞ்சு மணிக்குப் போயிருவேன்.."

"ஏன் அவ்வளவு நேரம்..!?"

"ம்..ம்..சென்னையில இறங்கி..மதுரைக்கு போக,ப்ளைட்க்கு வெய்ட் பண்ணி,அங்கே இறங்கி,வண்டியில மூனு மணி நேரம் போகனும்...."

"ஷ்...ஷ்...அவ்வளவு தூரமா....,"என ஆச்சர்யமாக கேட்டவள்,பேசிக் கொண்டே என் தோள் மீது,தலை சாய்ந்தாள்.என்னால் அதனை தடுக்க முடியவில்லை .சாய்ந்துக் கொள்ளட்டும் ,என விட்டு விட்டேன் .சாய்ந்தவள் தழு தழுத்தக் குரலில் சொன்னாள்.

"சென்னை இறங்கியதும் எனக்கு ,வாட்ஸ் அப்ல மெசேஜ் போடு சரியா..!?நான் வெய்ட் பண்ணுவேன்."என்றவள்.தன் கண்ணீரை தடுக்க முடியாமல்,என் சட்டையை நனைத்தாள்.என் சட்டையை நனைத்து இறங்கிய அத்துளிகள் என் தோளின் தோல் அடைந்து,எந்தன் நெஞ்சுக் கூட்டை அடைந்தது .அக்கணம் ,எத்தனையோ பேர்கள்,அவ்விடத்தில் இருந்துக் கொண்டிருந்தாலும் ,விழிப்பிற்கும்,தூக்கத்திற்கும் இடைப்பட்ட ,சலனமற்ற,சஞ்சலமற்ற,எதுவுமற்ற,ஒரு ஆழ்மன நிலையில் நாங்கள் இருந்தோம்.

  சிறிது நேரம் கழித்து கிளம்பினேன்.நான் முன் செல்ல ,முனீரா பின் தொடர்ந்தாள்.

"சரி போயிட்டு வாரேன்.."என நான்
சொன்ன வார்த்தைக்கு.,பதில் சொல்லாமல் தலையை மட்டும் நடுநிலையாக ஆட்டினாள். நான் குடிநுழைவு சம்பிரதாயங்களை முடித்து விட்டு,விமானத்தில் அமர்ந்திருந்தேன்.விமானம் கிளம்ப ,சில நிமிடத் துளிகள் இருக்கையில்,"போய் வருகிறேன்"என குறுஞ்செய்தி அனுப்பினேன்.விமானம் புறப்பட்டு,மேலே மேலே சென்றது.

    ஆனால் எவ்வளவு தூரத்தில் பருந்துகள்,பறந்தாலும் ,பூமியில் கிடக்கும் ,தன் இரையின் மீது கண் வைத்திருப்பதைப் போல் ,உயரத்தில் நான் பறந்துக் கொண்டிருந்தாலும்,என் மனம் அவளை தான் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

(தொடரும்...)


வெள்ளி-சிங்கபூர் பணத்திற்கு தமிழர்கள் பயன்படுத்தும் வார்த்தை.
கம்போங்-கிராமத்தை குறிக்கும் மலாய் வார்த்தை.
பாஜு குரோங்-மலாய் பெண்கள் அணியும் பாரம்பரிய உடை.
தூடோங்-தலையில் கட்டும் முக்காடுத்துணியை குறிக்கும் மலாய் வார்த்தை.    

Monday, 15 May 2017

உன்னை காணாத வரம் வேண்டும்..!(1)


          திருச்சி சர்வதேச விமான நிலையம்.இரவு மணி 1-15 போல்,சிங்கபூர் செல்லவிருக்கும் டைகர் ஏர்வேய்ஸ் விமானத்தில்,கைப்பைகளுடன் ஏறிய பயணிகள் ,தங்களுக்கான இருக்கையைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.இதில் பலர் ,சிங்கபூருக்கு வேலைக்கு செல்பவராக இருக்கலாம்,அல்லது விடுமுறை நாட்களை கழிக்க இந்தியா வந்தவர்களாக இருக்கலாம்.ஏறிய பயணிகளில் சில வித்தியாசங்கள் இருந்தாலும்,அனைவரது மனதிலும் ஒரு கனவு நிச்சயமாக இருக்கும்.அக்கனவு ,தனது பழைய வீட்டை இடித்து புதிய மனை கட்டவோ,தன் குடும்பக் கடனை தீர்க்கவோ,தன் உடன்பிறந்தவர்களின் எதிர்காலத்திற்காகவோ என,இப்படியாக பல கனவுகளை சுமந்தவர்களாகத் தான் இருப்பார்கள் இப்பயணிகளில் பலர்.கனவுகளை சுமந்த இந்த மானுடங்களை சுமந்து பறக்க தயாராக இருந்தது விமானம்.

     மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது.சில மழைத்துளிகள் ,நான் இருந்த சன்னல் கண்ணாடியில் வழிந்து ,நெளிந்து, வடிந்துக் கொண்டு செல்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.விமானத்தின் வெளியில் மழையாலும்,விமானத்தினுள் குளிரூட்டிகளாலும்,குளிர்ச்சி பரப்பபட்டாலும்,என் மனக்குழி கனன்றுக் கொண்டிருந்தது.அக்கதகதப்பு என் உடலெங்கும் பரவி,ஏதோ ஒரு பரிதவிப்பை உணர்த்தியது.ஏனென்றால் நானும் சில வருடங்களுக்கு முன்னால் ,சிங்கபூரில் தான் வேலைப் பார்த்தேன்.விடுமுறையில் வந்தவன் திரும்பி செல்லவில்லை.இப்போது செல்ல வாய்ப்பு வாய்த்தும்,மனம் ஒப்பவில்லை.காரணம் ஒரு முகம்,அம்முகம் எனக்கு ஆறுதலைத் தந்தது,சிரிப்பைத் தந்தது,சில நேரங்களில்,தொடர்ச்சியாக கவிதைகளையும் தந்திருக்கிறது.

    அம்முகம் காணாமல் பரிதவித்த காலம் போய்,இனி அம்முகத்தை கண்டிட கூடாதென்று ,என் மனம் வெதும்பி கிடக்கிறது .அதற்கான காரணமும் இருக்கிறது.அம்முகத்திற்கு சொந்தக்காரியின் பெயர் முனீரா.

     சில வருடங்களுக்கு முன்னால்,சிங்கபூர் ரிவர்வேலி சாலையிலுள்ள "அர் ரவுதா"உணவகத்தில் தான் வேலைப்பார்த்தேன்.உணவக உரிமையாளர் நூர்தீன்,நன்றாக பழுத்த மாம்பழ நிறத்தில் இருந்தார்.மலாய்க்கார தாயிக்கும்,இந்திய தகப்பனுக்கும் பிறந்தவர்.அவரது நீளமான முடி ,மின் விசிறிக் காற்றினால் ,அவரது தோளில்  கொஞ்சம் நயனமாக ஆடியது.அவரது இருக்கையின் முன்னால் இருந்த என்னிடம்,தமிழ் கலந்த ஆங்கிலத்தில் கொஞ்சம் விசாரித்தார்.

"ஒம் பேரென்ன..!?

"அர்ஷத்."

"ரொட்டி போடத் தெரியுமா...!?"

"ம்ம்..ஆமாம்.."

"எல்லாரும் இப்படித்தான்லா சொல்லுறானுங்க...அப்புறம் சரியா வேல தெரிய மாட்டேங்குது..."என தொடங்கி,சம்பள விபரம்,தங்குகிற இடம் விபரமனைத்தையும்,சொல்லி விட்டு,கடையின் மேற்பார்வையாளர் மலேசிய தமிழரான சரவணனை என்னிடம் அறிமுகம் செய்து விட்டு,

"சாரா...எல்லா விபரமும் சொல்லுவான்..அவன்கிட்ட கேட்டுக்க.."என சொல்லி விட்டு ,என்னை சாரா என அழைக்கப்படும் சரவணனிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டார் நூர்தீன்.

    சாரா பார்க்கும்போதும்,பேசும்போதும் ரவுடிப்போல தெரிவான்.ஆனால் பழகிய கொஞ்ச நாளிலேயே புரிந்தது.இவன் நம்ம "கைப்புள்ள வடிவேலு"போல ,வெள்ளந்தியானவன் என்று.புரோட்டா போடும் இடத்திற்கு அழைத்துச் சென்று ,விபரங்களை சொன்னான் .எந்த எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று .விபரங்களை சொல்லும் போது ,புதிய நாடு,புதிய பழக்கங்களால் எனக்கு பயமும்,கலக்கமும் இருந்ததை சாரா உணர்ந்திருக்க வேண்டும்.அதனால் அவன் சொன்னான்.

"அர்ஷத் ..பயப்படாதலா...சாரா இருக்கேன் ஒனக்கு ஓ கே யா..!?என சிரித்துக் கொண்டு,அவனது வேலையைப் பார்க்க சென்று விட்டான்.அவனது சிரிப்பு என் கலக்க இருளிற்கு,சிறு பொறி வெளிச்சத்தை தந்தது.

       அந்த உணவகம் பாதியளவு சமையல் செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.அவ்விடத்தில் "தாய்லாந்து கடல் உணவும்,மேற்கத்திய உணவும் தயாரிக்கப்பட்டது .அதன் வெளிப்புறம் இந்திய உணவுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது .அதன் வலதுபுறம்தான் புரோட்டா போடுவதற்கான இடம்.அந்த இடத்தை ,பெரிய கண்ணாடியால் மறைத்திருந்தார்கள்.உள்ளே புரோட்டா போடப்படுவதை,வாடிக்கையாளர் பார்க்கும் வண்ணம் இருந்தது.அந்த இடம் தான்,நான் ஆட வந்த ஆடுகளம்.எனக்கு தெரிந்த வரை மற்ற சமையல் எல்லாம் சில நாட்கள் பார்த்தால்,மறுநாள் ஏறக்குறைய நம்மால் செய்திட முடியும்.ஆனால் புரோட்டா போடுவது அவ்வளவு எளிதாக பார்த்தவுடனே ,எல்லோராலும் செய்திட முடியாது,அதனை கற்றுக்கொள்ள,பொறுமையும்,தொடர் முயற்சியும் தேவை.

     சிங்கபூரில் பலவகையான புரோட்டாக்கள் செய்யப்படுகிறது .அதிலொன்று "டிஸ்ஸு "என்றும்,"பேப்பர் புரோட்டா"என்றழைக்கப்படும்.கூம்பு வடிவிலான புரோட்டா அது.புரோட்டா மாவை அகலமாக வீசி,அப்படியே தூக்கி ,"தாவா"வில் இதமான சூட்டில் போட்டு,அதன் மேல் "மஞ்சள் நெய்யை"தடவி,கொஞ்சம் சீனியை மேலாக தூவி,சிறிது நேரம் கழித்து,அதன் நடுவில் வெட்டி,சுருட்டி எடுத்திட வேண்டும்.இப்புரோட்டாவை சிறு பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.கண்ணாடியின் வெளியில் நின்றுக் கொண்டு ,சின்ன சின்ன கண்களைக் கொண்டு,அழகான பூக்களைப்போல்,சிறு குழந்தைகள் புரோட்டா போடுவதை வியப்பாக பார்க்கும் அழகை,வார்த்தைக்குள் அடக்கிட முடியாது.

    இப்படியாக தெரிந்த வேலையை செய்துக் கொண்டும்,தெரியாத வேலையை சாராவிடம் கேட்டுக் கொண்டும் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன்.அதனூடே மாலாய் மொழியை,தப்பும் தவறுமாக பேசி பேசி,ஓரளவு நன்றாக பேசவும் கற்றுக் கொண்டேன்.புரோட்டா ஆர்டர் வராத நேரங்களில் ,சாப்பிட வரும் வாடிக்கையாளர்களை,வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.அப்பொழுதான் ஐந்தாம் எண் கொண்ட மேசையில்,இரண்டு சீன ஆடவரும் ,ஒரு மலாய் பெண்ணும்,ஒரு இந்திய பெண்ணும், சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.அவர்கள் ஒன்றாக படிப்பவர்களாக இருக்கக்கூடும் .அந்த நால்வரில்,ஒருவரது இரு கண்கள் மட்டும் என்னை நிலைக்குத்தி பார்த்தது.சில கணங்களில் ,பார்வையை தவிர்த்து விட்டு,அவர்களுடன் பேச்சில் கலந்து விட்டது.அந்த நிலைகுத்திய பார்வை,என்னை நிலைகுலைய செய்தாலும்,அப்பார்வையின் தீண்டல் எனக்கு தேவையாக இருந்தது.

(தொடரும்...)
Tuesday, 2 May 2017

நிஸாவின் கையெழுத்து-5         கூட படிச்ச சேக்கு இப்பவும் கூட்டாளிதான்.தொடர்புலதான் இருக்கான்.சமது சிங்கபூர்ல, ரெஸ்டாரண்ட் வச்சிருக்கான்.எப்பவாவது,எங்கேயாவது பாத்தா பேசிக்குவோம்.ரெண்டு மூனு வார்த்தைங்க பேசிட்டு,வேற வேற பாதையில போயிருவோம்.பிர்தௌஸ்ஸை எடயில பாத்தேன்.தலயெல்லாம் வெள்ளையாகி இருந்துச்சி."என்னடா இப்படி.!?னு ,அவந்தலய காட்டி கேட்டேன்."விடுடா..மயிருதானே..."னு சொல்லி சத்தமாக சிரித்தான்.அப்புறம் கார்த்திக்கேயன் ,இவன் மதுரையில வாத்தியார் வேல பாக்குறான்னு கேள்விபட்டுருந்தேன்.அவன ரெண்டரை வருசத்துக்கு முன்னால,எங்க ஊரு பேங்குக்கு வந்திருக்கயில பாத்தேன்.அடயாளம் தெரிஞ்சிக்க கொஞ்ச நேரம் ஆச்சி."என்னடா..கார்த்தி வாத்தியாரா ஆயிட்டியாம்...!?ஹா...ஹா.."னு நான் சிரிச்சதும்,"ஆமா...நண்பா...நீ கவிஞனாயிட்டியாமே.."னு அவன் கேட்டதும்,எனக்கு சிரிப்பு தாளல.அவனை நான் தெரிஞ்சி வச்சிருப்பது போல,அவனும் என்னை தெரிஞ்சி வச்சியிருந்தான் போல.

     அப்புறம் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால,சாயல்குடி சுப்ரீம் கடயில செருப்பு வாங்க போயிருந்தேன்.ரொம்ப அலட்டிக்காம,நல்ல செருப்பா ஒன்னு தாங்க பாய்"னு சொன்னதும்,ரெண்டு மூனு செருப்புகள ,எடுத்துப்போட்டாப்ல,கடயில இருந்தவரு.அதுல ஒரு சோடிய நான் எடுத்துக்கொண்டு,கட பையங்கிட்ட கேட்டேன்."இந்த செருப்பு பிஞ்சுருமா..!?னு,அதுக்கு அவன் சொன்னான்."ஆமா..பிஞ்சிரும்..அப்பதானே,இன்னொரு செருப்பு வாங்க வருவீங்க..அந்த செருப்புக் கம்பெனியும்,நாங்களும் பொழைக்க முடியும்" னு சொல்லி விட்டு சிரிச்சான்.நானும் அவன் பேச்சை ரசிச்சேன்.காச கெட்டிட்டு,வீடெக்ஸ் கிட்ட நின்னுக்கிட்டு இருந்தேன்.ஏதாவது வண்டி வந்தா போகலாம்னு.,அப்ப ஒரு ஷேர் ஆட்டோ வந்துஞ்சி,மாரியூர் போக.

      டிரைவர் கிட்ட,ரெண்டு பக்கமும் ஒவ்வொரு ஆளா உக்காந்துக்கிட்டாங்க.என்னமோ,பூனைப்படை பாதுகாப்பு மாதிரி.நடுபக்கத்துல,பொம்பளைங்க நெறஞ்சி இருந்தாங்க.கம்பு பையில சாமான்களை வாங்கி மடியையும் நெறச்சிக்கிட்டாங்க.நான் உக்கார மிச்சம் இருந்தது,பின்னாடி கதவ தொறந்துப் போட்டு,காலியா இருந்த எடம்தான்.எனக்கு உள்ளுக்குள்ள ஒரு சந்தோசம்,காலைத்தொங்க போட்டுக்கிட்டு,வேடிக்கை பாத்துக்கிட்டு போவலாம்னு.ஆட்டோ கெளம்பி போனது.என் சந்தோசம் ரெம்ப நேரம் நெலைக்கல.ஆட்டோ டீசல் ஊத்த,பல்க்ல நின்னதும்,ஆட்டோ எங்க போகுதுனு கேட்டு ஒருத்தன் ஏறிக்கிட்டான்.என் பக்கத்துல ,அவன் வந்து உக்காந்ததும்தான்,எனக்கு தெரிஞ்சிச்சி.அவன் என்னோட படிச்ச ஒமர் னு.

         ஆட்டோ கெளம்ப ஆரம்பிச்சிச்சி.  ஒமர் ரொம்ப மாறியிருந்தான்,கண்ணுக்கு கீழே கருவளயமும்,ஒட்டிக் கருத்த மொகமும்,சிகரெட் கறப்படிஞ்ச பல்லு னு அவனை கெட்ட செயல்கள் ரொம்ப   சாப்புட்டுருச்சினு நெனச்சிக்கிட்டே,     நான் அவனைப் பாத்து கேட்டேன்."எப்படிடா இருக்கா..!?னு,நான் கேட்ட கேள்விய விட,என் பார்வய உள்வாங்கி இருப்பான் போல.பொல பொல னு பேச ஆரம்பிச்சிட்டான்."அதான் பாக்குறீலே..எப்படி இருக்கேன்னு...எல்லாம் போச்சிடா....ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுனேன்...இப்ப ஓஞ்சி போயிட்டேன்டா...எல்லாத்தையும் அனுபவிக்கனும்...எல்லா கெட்ட செயலையும் செஞ்சேன்...அப்புறம் அத விட முடியாம கெடந்தேன்...பொழைக்க போனா சரியா வருவான்னு,வெளிநாட்டு ஏத்தி விட்டானுங்க வீட்ல,அங்க போனதும் கொஞ்ச காசு கைல பொரளுச்சி,அப்புறமென்ன குடிதான்,குடிதான்,குடியே தான்.எத்தன பேரு எங்கிட்ட வாங்கி குடிச்சானுங்க தெரியுமா..!? ..........மவனுங்க இப்ப என்னய நாயி மாதிரி பாக்குறானுங்க..எல்லாத்தையும் வெறுத்துட்டேன்டா...என்று ,நான் கேட்காத விசயத்தையெல்லாம் சொல்லிக்கிட்டே போனாவனை இடயில மறச்சி,"சரி கல்யாணம் எதுவும் முடிச்சியா இல்லையா..!?னு கேட்டதுக்கு,அவன் சொன்னான்."ம் ம்..முடிச்சி வச்சானுங்க வீட்ல ,நான் திருந்துவேன்னு,மயிர திருந்துனேன்,கூட கொஞ்சம் நாசமாதான் போனேன்.இதுல ரெண்டு புள்ளங்க வேற பெத்தாச்சி,நான் திருந்த மாட்டேங்குறேன்னு,எம் பொண்டாட்டிக்காரி,மண்ணனய ஊத்திக்கிட்டு,பத்த வச்சிக்குவேன்னு ,பாவ்லா காட்டுனா,படார்னு புடிச்சிருச்சி,.......... அவள ராம்நாட் ஜி ஹெச்ல வச்சி பாத்து கூட்டி வந்து இருக்கா வீட்ல.அப்பவே செத்துருந்தாலும்,அடக்கம் பண்ணியிருக்கலாம்..ரொம்ப இப்ப கஸ்டபடுறா..."னு சொல்லி அவன் கண்ணு கலங்குனத,என்னால சாதாரணாமா எடுத்துக்க முடியல.மனசெல்லாம் வேதனையா போச்சி .இதுக்கிடையில ஆட்டோ ,போற வழியில ஆள எறக்கவும்,ஏத்தவுமா இருந்துச்சி.ஆட்டோ முக்கு ரோடைத் தாண்டி,ஒப்பிலான்,மாரியூர் போற ரைஸ் மில் வளைவுல வளஞ்சிச்சி.

      ஒமர் கிட்ட என்ன பேசனும்னு எனக்குத் தெரியல.அவனும் நானும் மவுனமாதான் இருந்தோம்.அந்த மவுனத்த கலைக்க,நாந்தான் பேச்செடுத்தேன்."டேய்..நம்மோட படிச்சிச்சில,சரிபு நிஸா இப்ப எப்படிடா இருக்கு..னு.உடனே பட்டுனு திரும்பி சொன்னான்.அந்த ............ .......தான் எம் பொண்டாட்டி"னு .எனக்கு சுர்ருனு இருக்கையில,யாரோ சொன்ன.,"கையெழுத்து எப்படி இருக்கோ,அப்படிதான் ஒருத்தவங்களோட தலையெழுத்தும் இருக்கும்"னு சொன்னது,நெனப்புக்கு வந்து சோக கீதம் பாடுச்சி.

(முற்றும்)


    

Monday, 1 May 2017

நிஸாவின் கையெழுத்து -4       அவர் வந்ததும் க்ளாஸ் ரூமே ,சத்தம் மூச்சி இல்லாம இருந்தது.உள்ளே வந்தவர் கடைசி பெஞ்சில ,உக்காந்திருந்த என்கிட்ட நின்னுக்கிட்டு,"என்னடா ..!?டம் டம்னு சத்தம் கேட்டுச்சி...யாருலே தட்டுனது...ஒழுங்கா எந்திரிக்கியளா..!?இல்ல எல்லாபயலுகளயும்..அடிச்சி சாகடிக்கவா..னு ,சத்தமா கேட்டாரு.எனக்கு சந்தேகம் நாம அடிச்சதுல வந்த சத்தமா..!?இல்ல..தம்புச்சாமி ஆடுனதுல வந்த சத்தமானு ,எனக்கு கொழப்பமா இருந்துச்சி..ஆனாலும்..எப்படி இருந்தாலும்,எங்கிட்டதானே நிக்கிறாரு...எப்படியும் எங்கிட்ட இருந்துதான் ஆரம்பிப்பாரு அடிக்க,அதுக்கு நாமளே ஒத்துக்கிட்டு ,அடியை வாங்கிக்கிருவோம்னு,எந்திரிக்கிறதுக்குள்ள ,தம்புச்சாமி எந்திரிச்சிட்டான்.உடனே ,வெளிய வா..னு கூப்பிட்டு,"பின்னி பெடல"எடுத்துட்டாரு.அடிய வாங்கிட்டு,அவன் எடத்துல உக்காந்துட்டு,சோத்தங்கை பக்க புருவத்த தூக்கி ஒரு சிரிப்பு சிரிச்சான்."எப்புடி நாமல்லாம் சிங்கம்ல"னு சொன்னது மாதிரி இருந்துச்சி.

      படிக்கிற எல்லாரும்,பத்தாம் வகுப்பு பரீட்சைக்கு மும்முரமா இருந்தாங்க.எனக்கு படிப்பு மேல பிரியமில்லாம போச்சி.ஏன்னா..என் குடும்ப சூழல் அப்படி...பழய வீடு..கஸ்டம்.. சொந்தக்காரங்க ஏளனமா பாத்ததுனு நெறய இருக்கு.அதனால படிப்பு மேல ஆசயில்லாம போச்சி.படிப்ப விட்டுட்டு பொழைப்ப தேடி ஓட ஆரம்பிச்சேன்.

    கூட படிச்சங்கள அப்ப அப்ப அங்க இங்கனு பாப்பேன்.2004 காலகட்டம்,எங்க பகுதிகள்ல "விடியல் வெள்ளி"குரூப்புனு பிரபலமாகி கிட்டு இருந்தாங்க.அதுதான் பின்னால "மனித நீதி பாசறை"னு சொன்னாங்க.இப்ப அந்த அமைப்போட பேரு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா.அந்த "மனித நீதி பாசறை"அமைப்புல ,சில பேரு சேந்து இருந்தாங்க.அந்த அமைப்புக்காரவங்க ,ராம்நாடு சின்னக்கடை தெருவுல,ஒரு பொதுக்கூட்டம் போட்டு இருந்தாங்க.அந்தக் கூட்டத்துக்கு,ஒப்பிலான்ல இருந்து, அந்த நிகழ்ச்சிக்கு ஒதவியா இருக்க,கொஞ்ச பேரு போயிருந்தாங்க.அதுல ஆரிபும்,முசாபர் அலிங்கிற ரெண்டு பேரு.பொதுக்கூட்டம் முடிஞ்சி,மறுநாள் "பைக்"ல அவுக ரெண்டு பேரும் வரயில,ஆக்சிடென்ட் ஆகிட்டாங்க.கீழக்கரை அவுட்டர்ல.அதுல ரெண்டு பேருக்கும் ,நல்ல அடி.அவுக ரெண்டு பேரையும் பாக்க,மறு நாள் ராம்நாட்டுக்கு,கெளம்பி போனேன்.

      ஒப்பிலானுக்கு ஆறரை மணிப்போல,மயில்வாகனம் பஸ் வரும்,அதுல போயி அஞ்சி கிலோ மீட்டர் தள்ளிப் போனா,முக்கு ரோடு வரும்.அங்க எறங்கி நின்னமுன்னா,கொஞ்ச நேரத்துல கடலாடியில இருந்து,"செதம்பரம்"பஸ்
ராம்நாட்டுக்கு வரும்.அதுல ஏறிப்போனா எட்டரை மணிப்பாக்குல போயிறலாம் ராம்நாட்டுக்கு.அப்படிதான் நானும் அடிபட்டிருந்த,அந்த ரெண்டுப்பேரயும் பாக்க,ராம்நாட்டுக்கு போக,முக்குரோட்டுல ,நின்னுக்கிட்டு இருந்தேன்.அப்ப பக்கத்து கருவ மர,நெழலுல நெறமாச வவுத்துப் புள்ளக்காரியா,என்னோட படிச்ச சரிபு நிஸா நின்னுக்கிட்டு இருந்துச்சி,அதுகூட ஒரு நடுத்தர வயசு பொம்பளயாளும் இருந்தாங்க.அவுக நிஸாவோட அம்மாவாக இருக்கலாம்னு நெனச்சிக்கிட்டேன்.ஆனா எதுவும் நிஸாகிட்ட நான் பேச முடியல.வாழ்க்கையில செட்டிலாகிருச்சினு நெனச்சிக்கிட்டேன்.

      அப்புறம் கொஞ்ச காலம் கழிச்சி,எங்க ஊரு IOB பேங்குல வச்சி,விஜயலக்ஷ்மிய பாத்தேன்.என்னை அடையாளம் கண்டு அக்கறையா பேசிச்சி."என்ன நல்லா இருக்கியா..!?கல்யாணமெல்லாம் பண்ணிட்டியானு..!?,நானும் ஆமானு சொல்லிட்டு,"நீ கல்யாணம் பண்ணிட்டியானு கேட்க முடியல,ஏன்னா கையில கொழந்தையும்,கழுத்துல தாலியுமா நின்னுக்கிட்டு இருந்தாப்ல விஜயலக்ஷ்மி .

(தொடரும்...)

    

Sunday, 23 April 2017

நிஸாவின் கையெழுத்து 3 (1800 வது பதிவு)      பள்ளிக்கூடம் நாலே கால் மணிக்கு விடுவாங்க.சேக்கோட சைக்கிள்ல தான்,நானும் அவனும் போவோம்.நானும் அவனும்,நல்லா ஒடம்பு போட்டுருப்போம்,எங்கள சொமக்க முடியாம,அந்த சைக்கிளு ,முக்கி மொணங்கும்.ரோடு கொஞ்சம் நல்லாவும்,ரொம்ப மோசமாவும் இருக்கும்.மாரியூர்ல இருந்து அண்ணா நகர் வரை ,பனைமரங்களாவும்.அண்ணா நகர்ல இருந்து ,ஒப்பிலான் சித்திக் அண்ண தோப்பு வரை ஒட மரமாக இருக்கும்.காலை சுடு வெயிலும்,சாயங்கால மஞ்ச வெயிலும்,நாங்க பயணிக்கைல கூடவே கத சொல்லி வரும் .எங்களோட இந்த பயணத்துல,ராஜ்கிரண் சேந்துக்குவாப்ல.யார்ந்த ராஜ்கிரண்னா.!?சாயல்குடியில இருந்து ஐஸ் விக்க வாரவரு.அவரோட பேரு எங்களுக்கு தெரியாது.அவர பாக்கயில,"ராசாவின் மனசில" ராஜ்கிரண் மாதிரி ,மொரடா இருப்பாப்ல.அதனால நாங்களா வச்ச பேரு அது.

    சில நேரங்கள்ல ,அவரோட ஐஸ் பொட்டி மேல என்னைய ஒக்கார வச்சி சைக்கிள் மிதிப்பாப்ல.என்னமோ யான மேல வார மாதிரி இருக்கும்.இதுல சேக்கு அவர எதாவது சொல்லி உசுப்பேத்துனா,ரெண்டு கைய விட்டு பந்தா காட்டுவாப்ல,எனக்கோ பயமா இருக்கும்.நான் இருக்குற "வைட்"ல சைக்கிளோட,முன் ரோதை தூக்குச்சோ,மூஞ்சு மொகற எல்லாம் பிஞ்சிரும்.இப்படியா கொஞ்ச காலம் போயிக்கிட்டு இருக்கைல,நானும் சேக்கும் வந்த சைக்கிள் ,மாடுமேல பிரேக்கு புடிக்காம மோதி,முன் ரோதை வளஞ்சி போச்சி.அதுக்கு மேல அந்த சைக்கிள பாவிக்க முடியல.அதோட சேக்கு படிப்ப விட்டுட்டான்.இன்னும் கொஞ்ச நாள்ல ஒமரும் நின்னுட்டான்,பள்ளிக்கூடத்த விட்டு...

(தொடரும்..)


Saturday, 22 April 2017

நிஸாவின் கையெழுத்து 2    எங்களுக்கு தமிழ்பாடம்,தமிழய்யா எடுப்பாக.தமிழய்யா பாக்க நல்ல வளத்தியா ,அதுக்கேத்த ஒடம்புமா இருப்பாக.தல முடிய "சோத்தங்கை" பக்கமா வாங்கெடுத்து சீவி,ஒரு சின்ன தூக்கனாங்குருவி கூடு மாதிரி,கும்மள் வச்சி இருப்பாப்ல.முரட்டு மீசையோட.அவரோட முடிக்கு காலம் வெள்ளை அடிச்சி இருந்துச்சி.இவரு "கருப்படிக்காம" விட்டுருந்தாப்ல.இங்லீஸ் பாடம் ஹெட்மாஸ்டர் எடுப்பாரு,அவருக்கு ரிடையர் ஆகுற வயசு.அப்புறம் கணக்கு வாத்தியாரு.இவர பத்தி கடைசியில சொல்லுறேன்.ஏன்னா ரொம்ப சொல்ல வேண்டி இருக்கு.அப்புறமா அறிவியல் பாடத்துக்கும்,வரலாறு பாடத்துக்கும் வாத்தியார் போடல கவர்மென்டு.இந்த ரெண்டு வாத்தியாருக்கும்,படிக்கிற பசங்கள்ட ,காசு பிரிச்சி சம்பளம் கொடுத்தாங்க.அறிவியல் வாத்தியாரு ,கொஞ்ச நாள்தான் வந்தாரு.வரலாறு வாத்தியாரு பேரு ஶ்ரீராம்.நல்லா சிரிக்க சிரிக்க பாடம் நடத்துவாப்ல.தளபதி,உழப்பாளி பட ரஜினி மாதிரி முடி வச்சிருப்பாரு.

      இப்ப கணக்கு வாத்தியார பத்தி சொல்லுறேன்.இவுக ஊரு முதுகுளத்தூர் பக்கத்துல இருக்குற "எளஞ்சம்பூரு".அதான் காமடி நடிகர் செந்திலு இருக்காப்லைல.!?அவரோட ஊரு.பேரு சக்கரபாணி னு சொல்லுவாங்க.சாரு ரொம்ப ஸ்ரிக்ட்,அடினா அடி பிரிச்சி மேஞ்சிருவாரு.மாரியூர் பள்ளிக்கூடத்துல நல்லா படிச்சவங்களுக்கும்,பாதியில ஓடுனவங்களுக்கும் ,சாரோட அடிதான் காரணம்னா பாத்துக்கங்களேன்.கணக்கு பாடம் நல்லா நடத்துவாக.எனக்கு கணக்கு பாடந்தான் புடிச்சாமான பாடம்.

      ஒரே வகுப்புல படிச்சாலும்,பொம்பள புள்ளைங்க கிட்ட பேச முடியாது.பக்கத்துல இருந்தாலும்,வெவ்வேற தீவுல இருக்குற மாதிரிதான்.அட்டெண்டன்ஸ்ல பேர வாசிக்கைலதான்,இது இந்த பொண்ணோட பேருனு தெரிஞ்சிக்கலாம்.இந்த சரிபு நிஸாவால எனக்கு ஒரு பிரச்சனை.அது என்னனா,என்னோட கையெழுத்து நல்லா இருக்காது.பரீட்சை பேப்பர  வாத்தியாருங்க திருத்தினா,நான் பதில் எழுதி இருந்தாலும்,கையெழுத்து சரியில்லனு திட்டுதான் விழும்.எனக்கு நேர் எதிரா,அந்தபுள்ள நிஸாவோட கையெழுத்து,ரொம்ப அழகா இருக்கும்.அதை காட்டியே,என்னை தமிழய்யா திட்டுவாரு.இல்லனா நிஸாவ பாராட்டும்போதெல்லாம்,என்னய ஒரு மாதிரியா பாப்பாரு.அப்போதெல்லாம் யாரோ "கையெழுத்து எப்படி இருக்கோ,அப்படிதான் ஒருத்தவங்களோட தலயைழுத்து இருக்கும்னு"சொன்னது.நெனப்புல வந்து குத்தாட்டம் போடும்.

(தொடரும்...)