Sunday 29 May 2016

ஈரத்துண்டு..!!

காய்ச்சலின் போது ஈரத்துண்டைக் கொண்டு
உடல் சூட்டைக் குறைப்பதைப் போல்
மன உளைச்சலின்போது உன் நினைவுத்துண்டைக் கொண்டு
என் மனம்தனை துடைத்துக் கொள்கிறேன்.!

    

Thursday 26 May 2016

என் எழுத்துக்கள் !

சிப்பியைக்கொண்டு
சமுத்திரத்தை இரைக்கும் முயற்சிதான்
என் எழுத்துக்கள் !

     

Monday 23 May 2016

மன்னிப்பாயா..!?

என்னை மன்னித்து விடு
தொலைந்து போன என்னை
தேடிப் பிடிக்க
உன்னைக் கொஞ்சம்
எழுதிக்கொள்கிறேன்.!

     

Sunday 22 May 2016

என் கவிதைகள்!

உன் நினைவிற்குள்
என்னை மறந்திடுகையில்
தென்படும் வாக்கியங்களே
என் கவிதைகள்!

   

Saturday 21 May 2016

காற்று.!

வெற்றுக் குடுவைகள் என்றாலும்
நிரம்பிதான் இருக்கிறது
காற்று!

    

Tuesday 17 May 2016

நிஜம் தொலைத்த நிழல்.!(சிறுகதை)


      ஏன் என் வாழ்வில் நீ வந்தாய் எனத் தெரியவில்லை,எல்லோரும் நம்மை பிரிந்திட வேண்டிய போது,நாம் இணைந்திருந்தோம்,மற்றவர்கள் நாம் இணைந்தே வாழ வேண்டும் என ஆசைப்படுகிற போது நாம் பிரியப் போகிறோம்...!?ஏன் இந்த முரண் ,...!?இதுதான் வாழ்க்கையா....!?புரியாத போது பயணிப்பதும்,புரியும்போதும் முடிந்திடுவதுதான் வாழ்க்கையா..!?இன்னும் எனக்கு ஒன்றும் புரியவில்லை .


      நான் செய்த சேட்டைகளையெல்லாம் ரசித்தவள் நீ.!என் நீள் முடிக்கு பின்னலிட்டவள் நீ..! இன்னும் இன்னும் நான் செய்த திமிருத்தனங்களுக்கு தூபம் போட்டவள் நீ..!இன்றோ நீ நான் செய்வதெல்லாம் தவறென்று பிரிய முனைகிறாய்.நான் செய்வதெல்லாம் தவறுதான்,நான் திருந்தப் பார்க்கிறேன் ,அதற்காக நீ என்னைப் பிரிய நினைக்காதே.....

        நம் வீட்டுச் சுவரும் உன் கை விரல்களைத் தேடுகிறது,உன் நினைவுகள்காற்றைப் போல நம் அறைகளில் நிறைந்திருக்கிறது .நான் என் தவறுகளை ,நான் விட்டாலும் ,நீ என்னை ஏற்பதாகவும் இல்லை.என்னை நீ தொலைத்து விட்டுப் போகிறாய்.நான் உன் நினைவுகளை பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருக்கிறேன் ...!! என தன் நாளேட்டில் என்றோ எழுதிய வரிகளைப் படித்ததும்,கன்னத்தில் கண்ணீர் கோலமிட்டதை தடுத்திட முடியவில்லை ,முதியோர் இல்லத்திலிருந்த அஷ்ரப்பினால்....!!

     
      

Monday 16 May 2016

டிஸ்ஸு"!

நம்மை அழகாக்கிட
தன்னை அழுக்காக்கிக் கொள்கிறது
"டிஸ்ஸு"!

    

Sunday 15 May 2016

புளியம்பழங்கள் !

பழமென்றாலும்
இனிப்பதில்லை
புளியம்பழங்கள்!

    

Saturday 14 May 2016

மல்லிகை.!

வீதியில் கிடந்தாலும்
வாசம்தான் வீசுகிறது
மல்லிகைகள்.!

     

Thursday 12 May 2016

மௌனக் கதறல்..!!


காக்கையின் கரைதலில் கண்ணீர் கலந்திருக்கிறது
பறந்து கடந்துச் செல்லும் கொக்குகளும் முணங்களுடன் செல்கிறது
வாலைத் தட்டி ஓடித்திரியும் அணிலின் கண்களில் ஏக்கம் நிறைந்திருக்கிறது
தென்னைமர மைனாக்கூட்டில் ஒப்பாரி கேட்கிறது
வீதியில் செல்லும் வெள்ளாடுக்கூட்டத்தில் வெறுமை விளையாடுகிறது
கவிதை தரும் என் சிந்தனைக்கூடமும் சிதிலமடைந்து விட்டது!

ஆம்!
புதுப்பள்ளிக்காக
உயிருடன் உணர்வுடன் உறைந்திருந்த பள்ளிவாசல் உடைபடுவதால்........!!!!

Tuesday 10 May 2016

எஸ் டி பி ஐ நீ புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால்...!!


தேசத்தை சூழ்ந்திருக்கும் பாசிசக் காற்றை நீ உணர்ந்திருக்க வேண்டும்!
அதிகாரவர்க்க கரங்களில் படிந்திருக்கும் ரத்தங்கள நீ படித்திருக்க வேண்டும்!
கலவரங்களில் கருவறுக்கப்பட்ட அபலைகளின் அழுகுரல்களை நீ கேட்டிருக்க வேண்டும்!
நீதியின் பேரினுள் ஒழிந்திருக்கும் அநீதியை நீ அறிந்திருக்க வேண்டும்!
இத்தனையும் நீ அறிந்தவனென்றால் இந்நேரம் எஸ்.டி.பி.ஐ யில் நீ இணைந்திருக்க வேண்டும்!

           

Saturday 7 May 2016

பூக்கள் !

தோட்டக்காரனுக்காக மட்டுமே
சிரிப்பதில்லை
பூக்கள்!

     

Friday 6 May 2016

எஸ்.டி.பி.ஐ.

எங்கள் இரத்தங்கள் இளம்சூடானது
எங்கள் கண்கள் பெரும்கனவுகள் கொண்டது
எங்கள் சிந்தனைகள் மக்கள் விடுதலைக்கானது"
எங்கள் பயணம் அடிமைச்சங்கிலிகளை அவிழ்ப்பது
எங்கள் காதல் களமாடுவது
இக்கவிதை எஸ்.டி.பி.ஐ கட்சிக்கானது!

       

Tuesday 3 May 2016

வேடிக்கை மனிதர்கள்...!!


      "என்னடா ..!?எப்படி இருக்குறா..!?அடுத்த வாரம் ஊருக்கு போறேன்..மதுரையில 80 லட்சத்துல வீடு கட்டுனேன் ல அது குடியேற போறேன்... "என்று சொல்லி விட்டு என்னை கடந்து சென்றார் உறவுக்காரர் ஒருவர்.இதற்கு முன்னால் சென்னையில வீடு,ராமநாதபுரத்துல நெலம்னு வாங்கி ,பணக்காரத்தனமாக ஊருக்கு தெரிபவர்.ஆனால் ஊருல இருக்குற "உம்மா ,வாப்பா"வுக்கு நோன்பு பெருநாள் ,ஹஜ் பெருநாள் காலத்துல மட்டும் , பெருநாள் காசு கொடுத்து விடுவாரு.."அந்த உறவுக்காரர்.

      "என்னடா...செய்ய சொல்லுறே...!? சின்ன புள்ளயில இருந்துதான் கஷ்டபடுறேன்..ஒழச்சு ஒழச்சு...அக்கா ,தங்கச்சி கல்யாணம்,
தம்பிக்காரன் கல்யாணம் ,வயசான வாப்பா உம்மா னு நல்லது ,கெட்டது எல்லாம் செஞ்சி கிட்டு இருக்கேன்..இதுல நான் என்னத்த பேங்க்ல சேர்த்து வச்சிருக்கேன்....!?பாப்போம்..அல்லாஹ் என் கஷ்டத்தை தீர்ப்பான்,அவன் எனக்கு கூலிய தருவான்டா...!!"னு சொல்லி சென்ற என் நண்பனையும் பார்க்கிறேன் .

எனக்கென்னவோ இவ்விருவரையும் பார்க்கும்போது " உறவுக்காரர் மனதால் பிச்சைக்காரனாகவும்...நண்பன் அவன்
மனதால் பணக்காரனாகவும் எனக்குத் தெரிகிறார்கள்.

        

Monday 2 May 2016

மறுபக்கம் !

நாணயத்தின் இருபக்கம்போல்!
நேசத்தின் மறுபக்கம் துயரம்!