Monday 30 June 2014

வரதட்சணையெனும் ..!!

இளைஞனே!
ஏன் செய்கிறாய் !?
நிந்தனை !

எதற்கு கேட்கிறாய்!?
வரதட்சணை !

பாறைப்போன்ற
உனது வாழ்வில்
பூச்செடியாய் படர்ந்திட வாராளே.!!
அதற்காகவா..!?

கோடைப்போன்ற
உனது இளமைக்கு
வசந்தமாக வாராளே.!
அதற்காகவா.!?

ஒற்றை மரமான உனக்கு
வாழை மரமாக சந்ததி தர வாராளே.!!
அதற்காகவா..!?

படுக்கைக்கு பாயாகவும்
நோயின்போது தாயாகவும் மாறிட வாராளே.!!
அதற்காகவா.!?

ஒரு "ஒப்பந்தத்தினால்"
உன்னுடன் வாழும் நாளெல்லாம் பயணிக்க வாராளே.!!
அதற்காகவா.!?

சொல்!
எதற்கென்று சொல்!?

வரதட்சணையெனும்
பிச்சைக்காசு தான்
உனக்குத்தேவையென்றால்!

உனது பாலினம்
ஆணினம் இல்லையென்பதை
ஒத்துக்கொள்.!!

       


Sunday 29 June 2014

நோன்பு.!

இரும்பின் துருக்கள்
தீயினால் விலகுவதைப்போல்!

நோன்பு இருப்பதினால்
அகல்கிறது
உள்ளத்தின் அழுக்குகள்!

        

இறைமறை..!!

எத்தனையோ புத்தகங்கள்
படித்து முடிக்கும்வரை!

இத்திருமறையோ
மறுமைவரை
ஒளியாகும் இறைமறை.!!

      

ரமளான் மாதம்!

ரமளான் மாதத்தில்!

தேனில் ஊறிய
பேரீத்தம் பழத்தைப்போல்!

உள்ளம் திளைக்கிறது
ஆன்மீகத்தேனில்!

 

விஷேச நாட்கள் !

ஊரு ,உலகமே
மகிழ்ந்திருக்கும்
விஷேச நாட்களில்!

ஒவ்வொரு வீட்டிலும்
இரு கண்கள் மட்டும்
கலங்கி இருக்கும்!

அது
விரும்பியோ
விரும்பாமலோ!

தன் பிள்ளைகளை
பிரிந்திருக்கும்
தாயின் கண்கள் !!



நம்பிக்கையில்லை..!!

தன்
தாயையும்
தாரத்தையும்
நேசிக்காதவனா..!?

மற்ற உயிர்களை
நேசிக்கப்போகிறான்..!?

      

Saturday 28 June 2014

மாற்றமா..!!??

இந்தியாவில்
ஆட்சி மாற்றம் என!

யார்யா..!?
காமெடி பண்ணுறது!

ஆளும் கட்சியின்
பேர்தான்யா மாறி இருக்கு...!!

   

Friday 27 June 2014

கெட்ட பெயர்கள் !

மொத்த கெட்டப்பெயர்களையும்
நான் ஒருத்தனே பெற்றிருப்பேன்!

இறைவா..!!
உனது திருமறையையும்
நபிகளாரின் வாழ்வியலையும்
படிக்காமல் போயிருந்தால்..!!

      

Thursday 26 June 2014

வாசங்கள்..!!

பெருநாட்களின்
புதுச்சட்டை  வாசம்!

பள்ளிகூட காலங்களில்
கடந்துப்போன
சீகக்காய் வாசம்!

தேங்காய் சோற்றில்
கருவாட்டு ஆனத்தின் (குழம்பு )வாசம்!

முத்தமிட்ட
ஆச்சாவின் (பாட்டி) வெத்தலை வாசம்!

குழந்தை முகத்தில்
தாய்ப்பால் வாசம் !

மழைக்கால
மண் வாசம்!

மாலை நேர
மல்லிகை வாசம்!

நேசங்கள் மட்டுமா..!?
பாசத்தை சொல்கிறது !

இப்படியாக
வாசங்களும்தான்
நேசங்களை நினைவூட்டுகிறது !

         

Wednesday 25 June 2014

வினோதமான சிறை!

வெளிநாடு என்பது
ஒரு வினோதமான சிறை!

அதில்
உள்ளிருப்பவன்
வெளி வர தவிக்கிறான்!

வெளியிலிருப்பவன்
உள்ளே வர துடிக்கிறான் !

    

Tuesday 24 June 2014

ஓர் அதிகாலை...!!


சுற்றுச்சுவற்றினுள்
ஒட்டு திண்ணை!

அதன்மேல்
ஓர் தலையணை !

அதுதான்
எனது படுக்கை!

எழவா,!?
தொடரவா.!?

முடிவை தராதிருந்தது
மனம்!

பாதி கண்களை ஆக்கிரமித்திருந்தது
தூக்கம்!

மெல்லிய சப்தங்களில்
லயித்திருந்தது உள்ளம்!

பள்ளிவாசல் மினராவிலிருந்து
புறப்படும் 
புறாக்களின் சிறகடிக்கும 
சப்தத்தில்!

எங்கோ 
திருவிழாவில் கட்டப்பட்டிருந்த 
ஒலிப்பெருக்கியில் ஒலித்த
சோகப்பாடலில்!

மின் கம்பத்தில்
காகம் கரைவதில்!

கூட்டைத்திறந்ததும்
கோழிகள் "கெக் கெக்"என
 கத்தியதில்!

சர சரவென 
ஆட்டுக்கெடையின் நடையில் !

அக்கம்பக்கத்தில்
மழலைகள்  எழுந்திடாமல்
அழுததில்!

இத்தனைக்கும் ஊடாக
குமரிகளின் பேச்சு சப்தம் கேட்டது!

என் இடத்தை கடக்கும்வரை
அப்பேச்சுக்கள்
கொஞ்சம் தடைபட்டது!

இடத்தை
கடந்த பிறகு
ஓர் குரல் சொன்னது!

"படுத்து கிடக்கிறான் பாரு
தறுதலை"என!

உடனே சிரிப்பலை
"சல சல"வென!

அதில் ஓர் குரல் கண்டித்தது 
"அது தப்பு" என!

தறுதலை எனும் வார்த்தை 
எனக்கு சினத்தை தந்தது!

"தப்பு"என தடுத்த குரல் 
என்னை சிந்திக்க  வைத்தது!

என்ன செய்ய.!?
வாழ்வில் காயப்படுத்துகிறது
பல கத்தி முனைகள்!

மருந்திடும்
சில மயிலிறகுகளால்தான்
கத்தி முனைகள் மன்னிக்கப்படுகிறது!

 

குளிர்க்காற்றே..!!


இரவு நேரத்தில்
வாகனச் சன்னலோர
பயணத்தின் போதும்!

மேகங்கள் சூழ்ந்து
இருட்டும்போதும்!

மலையுச்சியில்
நிற்கும்போதும்!

பச்சை வயல்வெளியில்
நடக்கும்போதும்!

தண்ணீரால் ததும்பியிருக்கும்
கண்மாய் கரையை கடக்கும்போதும்!

அடர்ந்த காட்டினுள்
செல்லும்போதும்!

பங்குனி மாத
அதிகாலையின் போதும்!

சட்டையில்லாத போதும்!
சட்டைப்பித்தான்
இடைவெளியில் நுழைந்தும்!


குளிர்காற்றே!
நீ!

என்னைத்
தொட்டும் சென்றுள்ளாய்!

தொடர்ந்து
தழுவியும் உள்ளாய்!


கண்ணை மூடி
அனுபவிக்க வைத்துள்ளாய்!

கன்னத்தில் அறைந்து
திரு திருவென முழிக்கவும்
வைத்துள்ளாய் !

கண்ணயர்ந்து
தூங்கச் செய்துள்ளாய்!

அடிக்கடி
தூக்கத்தை கலைத்தம் உள்ளாய்!

கொஞ்ச காலமாக
என்னை
நீயோ..!!

உன்னை
நானோ.!!

தொலைத்துக்கொண்டோம்!
அல்லது
மறந்து விட்டோம்!

இதோ
நான்
சன்னலோர "இருக்கையில்" !

கையில்
சரித்திர நாவலொன்று
இருக்கையில் !

என் முகம்
தீண்டுகிறாய்!

பிஞ்சு விரல்களால்
முகத்தை தடவுதல்போல்!

மெல்லிய முத்தத்தைப்போல்!
தீண்டுகிறாய் !

கலைத்துப்போன
எனக்கு!

உன் தீண்டல் தேவைதான்
இப்போதைக்கு !

தழுவு!
ஆரத்தழுவு!

நான் ஆறும்வரை
தழுவு!

   

Sunday 22 June 2014

வாயாடி..!!

உலக மகா வாயாடிபோல
என் பேனா!

அதனால்தான்தானோ!?
நான்
ரகசியமாக சொல்வதையும்!

எழுதி
ஊருக்கே சொல்லிவிடுகிறது!?



Saturday 21 June 2014

சிறை..!

சிந்தனையெனும்
சிறையிலிருந்து
வெளியேறிட ஒரே வழி!

'எழுதிடுவது''!



Friday 20 June 2014

மாட மாளிகைகள் !

மலர்களை
கோர்க்க உதவாத
நார்களைப்போல்!

என்ன பயன்!?
உறவுகளை
சிதறடித்து விட்டு!

கட்டப்படுகிறது
மாட மாளிகைகளால்!



Thursday 19 June 2014

ஆண்கள்!

ஆயுதங்களிடம்
சரணடைந்தவர்களை விட!

கண்ணீருக்கு
கட்டுப்பட்டவர்களே அதிகம்!

  

Wednesday 18 June 2014

அடக்குமுறைகள்.!

வீரர்களை 
கோழையாக்கிடாது!

அது
கோழைகளையும்
மாவீரர்களாக மாற்றி விடும்!

   

Tuesday 17 June 2014

ஆசை இருந்தும்..!!

எழுத
ஆசையிருக்கு!

வார்த்தைகளும்
வசமிருக்கு!

ஆனாலும்
பேனாவோ மௌனித்து கிடக்கு!

மனித மிருகங்கள்!
மனிதத்தை வேட்டையாடும்போதெல்லாம்!

இந்நிலைதான்
என் பேனாவிற்கு!


Monday 16 June 2014

ஆண்மை!

பெண்மையை சிதைப்பவன்
ஆண்மை மிக்கவன் அல்ல!

தன் ஆண்மையில்
குறையுள்ளவன்!

    

Sunday 15 June 2014

துடிப்பு..!!

வாழும் காலமெல்லாம்
துடிப்புடன் இரு!

தாயின் வயிற்றில்
உயிருடன் இருப்பதை
துடித்து உணர்த்தியது போல்!

இல்லையாயின்
இவ்வுலகம்
அடக்கம் செய்ய தயாராகிவிடும்!

Saturday 14 June 2014

மதங்கள்..!!

மதங்களை பின்பற்றுபவர்கள்
மத வெறியர்கள் அல்ல!

மத வெறியர்கள்
மதங்களை பின்பற்றுபவர்களல்ல!

ஏனென்றால்
எந்த மதமும்!

மனிதத்தை கொன்று
மதத்தை விதைக்க சொல்லவில்லை!

    

Friday 13 June 2014

மீன் முள்.!

துப்பவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
தொண்டையில் மீன் முள்ளாய்!

வெளிநாட்டு வாழ்க்கை!

     

Thursday 12 June 2014

பணக்காரன்!

நானும்
பணக்காரன்தான்!

பணத்தை மட்டுமே
''எண்ணி''யிருந்தால்!

ஆன்மாவை கொன்று
ஆடையை அலங்கரிக்க!

எனக்கு
உடன்பாடில்லை!

   

ரோசாப்பூ..!!

அழகிற்கு
அழகு சேர்க்க!

கையொன்று நீள்கிறது
பூவினை பறிக்க!

மற்றொரு கை
தடுக்கிறது !
பூவை பறிக்காமல் இருக்க!

காரணம்
செடியிலிருந்து  பூவை
பிரிக்க வேண்டாம் என
எண்ணம் மேலோங்க!

இப்போது
ரோசாவை விட
அழகானாள்!

வஞ்சி அவள்!

  

Tuesday 10 June 2014

அழகுகள்...!!

பனியினால்
ஈரமான பூமி!

கரும்பாறையில்
வெள்ளைக்கூந்தலாய் அருவி!

வெயில் காலத்திலும்
குளிர்தரும் வேப்பமரம்!

நீண்ட பெருவெளியில்
ஒற்றை பனைமரம்!

தாயின் தோள் சாய்ந்து
தூங்கும் குழந்தை !

முன்னங்காலில்
தலை வைத்திருக்கும் பூனை!

மண்ணை மீட்கும்
போராளியின் கோப பார்வை!

நொடிப்பொழுதில் கடந்திடும்
காதல் பார்வை!

தொடு வானம்!
தொடாத மேகம்!

கரையில் தெரியும்
தீவுகள்!

தீவிலிருந்து பார்க்கும்
எல்லையில்லா கடல்!

சுருக்கம் விழுந்த
ஆச்சாமார் (பாட்டி) கன்னங்கள் !

மை தீட்டிய
கண்கள் !

உலகெங்கும் அழகெல்லாம்
கொட்டி கிடக்கிறது!

ரசிக்க
லயிக்க
மானுட மனங்கள்தான்
பஞ்சமாக இருக்கிறது!

சட்னி எங்கே..!? {நகைச்சுவை}

     (போதையுடன் ஒருவர்)''யோவ்! தோச முடிய போகுது,சட்னி எங்கேயா..!?

       {உணவு பரிமாறுபவர் பதற்றதுடன்} ''சார்!இன்னும் உங்களுக்கு தோச வைக்கல,அது ''வாழ எல ''...!!

  

Monday 9 June 2014

விரல்கள்!

ஒற்றுமை
ஒற்றுமையென
ஓங்கி கத்துகிறது!

ஆளுக்கொரு
திசையை நோக்கி!

ஒரே கையை சேர்ந்த
ஐந்து விரல்கள்!

தாம் இணைவதுதான்
ஒற்றுமை என்பதை உணராமல்!

 

Sunday 8 June 2014

சொற்பதம்!

பூங்காவனம்!
மலர்வனம்!!

இரண்டும்
ஒன்றையே குறிக்கும்
சொற்பதம்!

தான்
சொல்வதுதான்
சரியென்று!

தர்க்கத்தில்
உறவுகள் மோதிக்கொண்டு!

வீணாகிறது
காலமும்
நேரமும்!

பாழாகிறது
பாசமும்
நேசமும்!


Saturday 7 June 2014

நீதி எனும் காற்று...!!

சுழன்று பறக்கிறது
காகிதங்கள்!

சுழற்றியடிக்கும்
காற்றினால்!

நீதிவான்கள் எனும்
காகிதங்கள்!

சிறைப்படலாம்!
சிதைக்கப்படலாம்!!
புதைக்கப்படலாம்!!!

ஆனால்
நீதி எனும் காற்று....!!!??

 

பூப்பதெல்லாம்..!!

பூக்கள் பூப்பதெல்லாம்
உன் புன்னகையிடம்
தோற்கத்தானோ..!?

     

Friday 6 June 2014

நகம்!

உனக்காக
நகத்தை நறுக்கிக்கொள்கிறேன்!

சந்தோசப்பட்டு கொள்!

அதற்காக
விரலையும் வெட்டுவேன் என
பேராசை கொள்ளாதே!

   

இலக்கு..!!

நாம்
எங்கு நின்றாலும்!

நம் இலக்கு
உயர்வானதாக இருக்கட்டும்!


Thursday 5 June 2014

ஓடு.! {1300 வது பதிவு}

உனக்கான
அங்கீகாரத்தை நோக்கி
நீயே ஓடு!

கர்பப்பையை நோக்கி
உயிரணுவாய் ஓடியது போல்!

      

உனது பார்வை!

வார்த்தகளை
தேடவில்லை!

எழுதுவதாக
எண்ணமும் இல்லை!

ஆனாலும்
உனது பார்வைகள்!

சில கவிதைகளை
என் மீது வீசி செல்கிறது!


உலகம்..!!

மலர்களை ரசிக்காத
உலகம்!

சருகுகளை நேசிக்கும்
என்னையா புரிந்துக்கொள்ள போகிறது!?

     

Wednesday 4 June 2014

மறதி!

மனிதனுக்கு
மறதி மட்டும்
இல்லாது போயிருந்தால்!

சிரிக்க
மறந்தே இருப்பான்!

   

இறையச்சம்!

இறையச்சம் கொண்ட
நெஞ்சம்!

எதை கண்டும்
அஞ்சுவதில்லை!

    

இரண்டே வாய்ப்பு!

வாழ்க்கையெனும்
ஆழ்கடல்
நம்முன் வைத்திருக்கும்
இரு வாய்ப்புகள்!

ஒன்று
நீந்து!

அல்லது

மூழ்கு!


Tuesday 3 June 2014

காதல் கவிதை..!! {சிறு கதை}


         ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் என்பதால்,அவ்வுணவகத்தில் கொஞ்சம் கூடுதலாக கூட்டம் இருந்தது.அங்கெங்கே திட்டு திட்டாக மனித தலைகள்.அதில் ஓரமாக ஓர் நடுத்தர தம்பதி.கூரைப்போன்ற வடிவமைப்பில் இருந்த அந்த கூடத்தின் கீழ் அமர்ந்திருந்தார்கள்.எட்டிப்பார்த்தால் தெரிந்திடும் தூரத்தில் கடல். சிறு பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.வயதானவர்கள் சிலர் நடைபயிற்சியில் இருந்தார்கள்.சிலரோ தான் நடப்பதோடு நிற்காமல் நாயையும் இழுத்துச்சென்றார்கள்.

        அந்த நடுத்தர தம்பதி  எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள்.விளையாடிக்கொண்டிருந்த தன் பிள்ளைகள் மேல் ஓர் பார்வை வைத்திருந்தாள்,தாயானவள்.தன்னெதிரே இருந்த கணவரை ஏறிட்டு பார்த்தவளாக கேள்வி எழுப்பினாள்.

    ''பாக்குற வேலையில ..!!நீங்க எழுதனுமாக்கும்...!! கேட்டாள் கதிஜா.

      ''எழுதுறதால வேலையை குறைக்க வேண்டியதுனு சொல்ல மாட்டியே...!! என்றான் காமில்.

    ''பிள்ளைக தலையெடுக்குது ,வேலையை  கொறச்சிட்டா ..!எப்படி வளர்க்குறதாம்...!?இது கதிஜா.

     ''சரி !என்ன சொல்ல வர்ரே..!?ஒளிச்சி மறச்சி பேசாதே !-இது காமில்.

   ''சரி!சொல்றேன்..!நீங்க காதல் கவிதை எழுதுறத பத்தி தப்பு தப்பாக பேசுறாங்க.!கல்யாண வீட்டுக்கு கூட போக முடியல..!!குசு குசுன்னு என்னைய பார்த்தே பேசுறாங்க!எனக்கு வெட்கமாக இருக்கு...!!என சொல்லியவள் கண் கலங்கி விட்டாள்.

அவள் கண்ணீருக்கு முன்னால்,இவன் சற்று தடுமாறியவனாக சொன்னான்.

    ''ம்..ம்..சரி சரி..!! விடு !எழுத மாட்டேன் போதுமா..!?இது காமில்.

     கதிஜாவிற்கு விளங்க வைக்க எத்தனையோ வழியிருந்தும்,இவன் முயலவில்லை.அவள் அழுததால் இவன் மௌனித்து விட்டான்.பதில்களையும் புதைத்து விட்டான்.

   சிறிது நேரம் கடந்தது.விளையாடிய பிள்ளைகள் பஞ்சாயத்தோடு வந்தார்கள்.''இவன்தான்'' மண்ணள்ளி போட்டான்.''இல்லை அவன்தான்''அடிச்சான் என வந்துவிட்டார்கள்.கிளம்ப நேரமானதால்,வீட்டிற்கு தம்பதியரும் கிளம்பினார்கள் .நான்கு சக்கர வாகனம் வீட்டை வந்தடைந்தது.

      சில வாரங்கள் கழிந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை.இதமான வெயில் இளஞ்சூடேற்றியது. படுக்கையில் புரண்டு படுத்த காமில்,இனி தூக்கம் வராது என எண்ணிக்கொண்டே எழுந்தான். கைலியை சரியாக கட்டிக்கொண்டு தன் அறையை விட்டு வெளியேறி,சமையலறை வந்தான்.அதன் பக்கத்தில்தான் குளியலறை.கதிஜா சமையலறையில் காலை உணவிற்கு தயார் செய்ய ஆயத்தமாகி கொண்டிருந்தாள்.அவன்
குளியலறை புகுந்தான்.

       நிமிடங்கள் கரைந்தது.குளித்து விட்டு வெளிப்பட்டான்.கீழே தாளை விரித்து இடியப்பம் சுடுவதற்காக ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தாள்.வந்தவன் அடுப்பில் இருந்த காபியை ஒரு குவளைக்குள் ஊற்றி குடித்தான்.அது தொண்டை வழியாக இறங்கி வயிற்றில் பரவியது.அச்சுகத்தை அனுபவித்தவனாக ,சிறு நாற்காலியை இழுத்து கதிஜா அருகில் போட்டுக்கொண்டு பேச தொடங்கினான்.

      ''என்ன.!?புள்ளைகளை எங்கே..!?-இது காமில்.

     ''மாமாவோட வெளியே போயிருக்காங்க..!!- இது கதிஜா.

   ''இன்னைக்குள்ள பேப்பர் வந்துச்சா..!?-இது காமில்.

   ''ம்...ம்...!!'சுரத்தே இல்லாமல் பேசியவள் ,தன்னருகில் கிடந்த தினசரி பத்திரிக்கையை
எடுத்து நீட்டினாள்.

      இன்னைக்கு ஏன் ஒரு மாதிரியாக இருக்காளே.!என நினைச்சிக்கிட்டே பத்திரிக்கையை வாங்கிப்பார்த்தான்.காரணம் தெரிந்து விட்டது.அவன் எழுதி காதல் கவிதை பத்திரிக்கையில்  வந்திருந்தது.

கவிதையானவளே..!!
--------------------
உணவக மேசை!

இருவரும் எதிரெதிர் திசை!

சூரியனை கடல் விழுங்குவதுப்போல்
காட்சி!

உன்னில் நான் மூழ்கினேன்
அதற்கு நான் மட்டுமே
சாட்சி!

முக்காட்டிற்குள்
உன் முகம்!

திண்டாட்டதிற்குள்
என் மனம்!

கடல் காற்று
உன் கூந்தல் கலைத்தது!

உன் விரல்கள்
சரி செய்தது!

எனக்கோ
காகிதத்தில் பேனாவாக
தெரிந்தது!

கவிதைகளை
விதைத்தது!

பசியிலிருப்பவன் முன்
உணவை வைத்து
உண்ண தடை விதிப்பதுப்போல்!

எரியும் அடுப்பில்
உப்பை போட்டுவிட்டு
வெடிக்கும் சப்தம் போடாதே என்பது போல்!

கவிதையானவளே!
கவிதையாக இருந்துக்கொண்டு
கவிதையெழுத தடை விதிக்கிறாயே..!!
 
                -காமில்.
பத்திரிக்கையில் வந்த கவிதையை படித்து விட்டு,தன் மனைவியின் முகத்தை பார்த்தான்.கதிஜா முகம் திரும்பாமலே உணர்ந்துக்கொண்டு ..

      ''இனி யாரு யாரெல்லாம், கேலி பண்ண போறாளுவளோ..!!?-என அலுத்துக்கொண்டாள்.

    ''யார் யாரெல்லாம் உன்ன கேலி செய்யிறாங்கன்னு சொல்லு.நான் பார்த்துக்குறேன்..!-காமில் கேட்டான்.

    ''ஏன்.?நான் சொன்னால் அவளுகளை பத்தி எழுதவா..!? -கதிஜா.

    ''பரவாயில்லையே..புரிஞ்சிக்கிட்டியே..!!-காமில்.

     காமில் முகத்தை நேராகப்பார்த்தாள். ''நீங்க என்ன திருந்தாத ஜென்மமா..!?-என்றாள்.

    ''இல்லை திருந்த விரும்பாத ஜென்மம்...!!என்றுச்சொல்லி 'ஹா ஹா'என இடியென சிரித்தான்.கதிஜா இடியப்பத்திற்கு வைத்திருந்த அரிசி மாவை காமில் மேல் வீசினாள்.அவன் சிரிப்பை நிறுத்தாமல் மேலும் சிரித்தான்.அச்சிரிப்பு கதிஜாவையும் தொற்றியது. அவளும் சிரித்தாள்.வெள்ளந்தியான காமில் சிரிப்பில் வெந்நீரில் கலந்தால் கரையும் வெல்லம்போல் கதிஜாவும் கலந்தாள்.கரைந்தாள்.

      என்னமோ ஏதோ என நின்றுப்பார்த்த காற்றும்,அவர்களது காதலை சுமந்து சென்றது.

நெரிஞ்சி முட்கள்!

கருவேலங்காட்டில் புரண்டு 
எழுந்தவன் நான்!

நெரிஞ்சி முட்களுக்கா
திகைத்து நிற்க போகிறேன்.!?

 

புரிதல்..!!

காலங்கடந்தே
சில புரிதல்கள்
கிடைக்கிறது!

புரிதல் கிடைத்தாலும்
காலம்...!!!?


     

இடி..!

இடிச்சப்தமும்
தேவைபடுகிறது!

சில
மொட்டுக்கள் பூக்க!

Monday 2 June 2014

போராளி..!!

ரத்தங்கள்
கொடுத்தாலும்
கொட்டினாலும்!

புது ரத்தங்களை
உருவாக்காமல் இருப்பதில்லை
உடல்கள்!

இவ்வுலகமெனும்
உடலில்
போராளிகளும் அவ்வாறே!

   

Sunday 1 June 2014

அய்யா காமராசரே!

ஏழையாக பிறந்தீர்!

ஏழையாகவே வாழ்ந்தீர்!

ஏழைகளுக்காகவே உழைத்தீர்!

இன்றைய
சில அரசியல்வாதிகளோ!

பண முதலைகளின்
கைக்கூலிகள்!

ஏழையாக வாழ்ந்ததை
சொல்லிக்கொள்கிறார்கள்!

 

வெளிநாட்டு வாழ்க்கை!

பல கனவுகள்
வெளிச்சம் பெற!

ஓர் கனவு
எரிவது!